Tuesday, March 29, 2011

பூண்டு புளி குழம்பு

இந்த பெயரை கேட்டாலே ஒரே குஜால்ஸ் தான். அவ்வளவு சுவையான ரெசிபி. நல்லா சூடா சாதம் வெச்சி உருளைகிழங்கு பொரியல்-ஐ தொட்டுகிட்டு சாப்பிட்டா.... இஷ்ஷ்ஷ்ஷ் அமிர்தம் தான் போங்க. தேவையான பொருட்கள்:

  • முதல்ல ரெசிபி நாயகன் பூண்டு - பத்து அல்லது பதினைந்து பல் நல்லெண்ணெய் - ஆறு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை - கொஞ்சம்

  • வெந்தயம் - ஒரு ஸ்பூன்

  • சின்ன வெங்காயம் - ஒரு கை நிறைய. (சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய வெங்காயம் ஒன்று)

  • தக்காளி - பெரியது ஒன்று

  • மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

  • மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

  • மல்லி தூள் - 1 ஸ்பூன்

  • புளி - ஒரு நெல்லிக்காய் அளவு (புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்)

  • அரிசி மாவு - 2 ஸ்பூன்

  • உப்பு
செய்முறை

  1. தக்காளி, வெங்காயம் இரண்டையும் மிக்சி-யில் நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.

  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை சேர்க்கவும்.

  3. கடுகு பொரிந்ததும் பூண்டு பற்களை சேர்க்கலாம். இரண்டு நிமிடம் பூண்டு வதங்கியதும் அரைத்த வெங்காயம் தக்காளி சேர்க்கவும்.

  4. பச்சை வாடை போனதும் மஞ்சள், மிளகாய், மல்லி தூள்கள் + உப்பு சேர்க்கவும். பின் இரண்டு கப் தண்ணீர் விடவும்.

  5. தண்ணீர் நன்றாக வற்றி அல்லது பூண்டு வெந்ததும், அரிசி மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.

  6. இரண்டு நிமிடம் கழித்து மல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.

Friday, March 25, 2011

இடியாப்பம் - முட்டை கறி

பேரு தான் முட்டை கறின்னு போட்டிருக்கு, ஆனா முட்டையவே காணம்னு பாக்கறீங்களா? இது உடைச்சு ஊற்றின முட்டை கறி.
இந்த காம்பினேசன் எங்க செட்டியார் (என் கணவர்) கண்டுபிடிச்சது.

தேவையான பொருட்கள்
முட்டை - இரண்டு
எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
கடுகு, உளுந்து, சோம்பு , கருவேப்பிலை - தாளிக்க
பெரிய வெங்காயம் - ஒன்று பொடியாக நறுக்கியது
தக்காளி - இரண்டு பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
உப்பு -கொஞ்சம்
எலும்பிச்சை சாறு - 3 ஸ்பூன்

செய்முறை
1 . கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சோம்பு , கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
2 . வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி வதக்கும் போது கொஞ்சம் உப்பு சேர்த்தால் தக்காளி சுலபமாக வதங்கும்.
3 . மஞ்சள், மிளகாய், மல்லி தூள் சேர்த்து கிளறவும். 2 கப் தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்றாக கொதிக்க விடவும். இப்போது முட்டை உடைத்து ஊற்றி விடலாம். முட்டை ஊற்றியபின் கொஞ்ச நேரம் கிளற வேண்டாம்.
4 . பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு உப்பு, எலும்பிச்சை சாறு சேர்த்து கிளறவும். முட்டை கறி ரெடி !!!

குறிப்பு
முட்டை உடைத்து ஊற்றிய பின் அடுப்பை மிதமான சூட்டிற்கு குறைத்து விடவும்.

Friday, March 18, 2011

மிளகு காளான் / பெப்பர் மஸ்ரூம்

எங்க செட்டியாருக்கு (காரைக்குடி பக்கம் கணவரை இப்படிதான் சொல்லுவாங்க) ரொம்ப பிடிச்ச ரெசிபி -ங்கோ !!!

காளானை இந்த முறையில் செய்யும் போது கூடுதல் ருசியாக இருக்கும். மிளகு காரம் உடலுக்கு நல்லது.

தேவையான பொருட்கள்:


எண்ணெய் தேவையான அளவு
கடுகு, உளுந்து, கருவேப்பிலை
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - இரண்டு
பச்சை மிளகாய் நறுக்கியது - 1
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகு தூள் - இரண்டு ஸ்பூன்
காளான் - நறுக்கியது - 250 கிராம்
உப்பு தேவையான அளவு
இந்த செய்முறைக்கு தண்ணீர் தேவை இல்லை

செய்முறை:


கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடவும். பின்பு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.


பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நறுக்கிய காளான் -ஐ இதோடு சேர்த்து வதக்கவும்.


இரண்டு நிமிடம் கழித்து காளான் நன்றாக தண்ணீர் விடும். இப்பொழுது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, மூடி விடவும்.


ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை காளான்-ஐ நன்கு கிளறி விடவும். 15 நிமிடத்தில் தண்ணீர் முற்றிலும் வற்றி விடும்.


இப்போது அடுப்பை அணைத்து விட்டு மிளகு தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டால் வேலை முடிந்தது !!!! :)

குறிப்பு :
தயிர் சாதம், லெமன் சாதம், சப்பாத்தி இவற்றுடன் மிக நன்றாக இருக்கும்.

Thursday, March 17, 2011

வெஜ்ஜிடபில் சப்பாத்தி ரோல்

உஸ்ஸ்ஸ்ஸ் ..... அப்பாடா. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு வழியா டைம் கிடைத்திருக்கு. இந்த பதிவை நான் இரண்டு நாளைக்கு முன்பே செய்து இருக்க வேண்டியது . என் வீட்டு அரை டிக்கெட் செய்த லீலையால் கொஞ்சம் லேட். என் பொண்ணுக்கு என் மேல என்ன கோபம்னு தெரியல. இந்தா வெச்சுக்கோன்னு ஸ்பேஸ் -பார் பட்டன்-ஐ பிச்சு கைலே கொடுத்திட்டா. அதை ஒட்ட வெச்சு நான் ரெடியாக 2 நாள் ஆயிடுச்சு.

சரி மேட்டர்-ருக்கு வருவோம். என் வீட்டு பக்கத்துல இருக்கும் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் -ல தான் இதை முதன் முதலாய் ருசி பார்த்தேன். டேஸ்ட் நாக்கிலே ஒட்டிகிச்சு. ரொம்ப சீக்கிரமா வேலை முடிந்து விடும்.

தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 6
காரட் - 3
(காலிப்ளவர், உருளை கிழங்கு , பச்சை பட்டாணி போன்ற எளிதில் வேக கூடிய காய்கறிகளை உங்கள் வசதிக்கேற்ப சேர்த்து கொள்ளுங்கள்)
சோம்பு - கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
தனியா தூள் - அரை ஸ்பூன்
(உங்களுக்கு சிக்கன் மசாலா, கரம் மசாலா பிடிக்கும் என்றால் ஒவ்வொன்றும் கால் ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள் )
உப்பு, தண்ணீர் , எண்ணெய் தேவைகேற்ப


செய்முறை:
1 . காய்கறிகளை கழுவி பொடியாக அறிந்து எடுத்து வைத்து கொள்ளவும்.
2 . அடிபிடிக்காத பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பை அதில் சேர்க்கவும் .
3 . சோம்பு பொரிந்ததும் (எந்த ரி -ன்னு தெரியல கொஞ்சம் அஜீஸ் பண்ணிகோங்க. தெரிஞ்சவங்க எனக்கு கமெண்ட்-ல சொல்லுங்க தெரிஞ்சிக்கிறேன்) , நறுக்கிய காய்களை போட்டு லேசாக வதக்கவும். இப்போது எல்லா பொடிகளையும் சேர்த்து லேசாக வதக்கவும்.
4 . தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைத்து விடவும். தண்ணீர் சுத்தமாக வற்றிய பின் அடுப்பை அணைத்து விடலாம்.


ரோல் செய்ய:
சப்பாத்தி (கோதுமை அல்லது மைதா மாவில் செய்தது)
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
துருவிய காரட் - ஒன்று
எலும்பிச்சை சாறு - இரண்டு ஸ்பூன்

1 . சப்பாத்தியின் நடுவில் சமைத்த காய்கறிகளை வைத்து, அதன் மேல் வெங்காயம், காரட், கால் ஸ்பூன் எலும்பிச்சை சாறு (ஒரு சப்பாத்திக்கு இந்த அளவு )தூவி , படத்தில் உள்ளது போல் ரோல் செய்து சூடாக பரிமாறலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...