Tuesday, April 26, 2011

தக்காளி சட்னி


தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
பூண்டு (பெரிய பல்) - 4
இஞ்சி - 2 துண்டு (2 பெரிய பல் பூண்டிற்கு சமமாக)
புதினா இலை - ஒரு கை
மல்லி தழை - ஒரு கை
பச்சை மிளகாய் - 2   (அல்லது) வறமிளகாய் - 3 .
கருவேப்பிலை - ஒரு கை
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
உப்பு
தேங்காய் துருவல் (அல்லது) பொடியாக நறுக்கிய தேங்காய் பல் - 1 /4 கப் (தேங்காயை பற்களாக நறுக்கி போடுவதை விட துருவி சேர்த்தால் சட்னி ஒரே சீராக இருக்கும்)
 
செய்முறை:
 
  1. புதினா, மல்லி, கருவேப்பிலை இலைகளை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி வைத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் உப்பு, தேங்காய் துருவலை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.
  3. 2 நிமிடம் கழித்து உப்பு சேர்த்து வதக்கவும். இப்போது தக்காளி நீர் விட்டு நன்றாக வதங்கும்.
  4. 3 நிமிடம் கழித்து தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வதக்கிய பின் அடுப்பை அணைத்து விடலாம்.  
  5. ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்தெடுங்கள். கம கம தக்காளி சட்னி ரெடி.
 
தோசை, இட்லி, தயிர் சாதம் இவற்றுடன் பரிமாறலாம்.

Wednesday, April 20, 2011

பால் பாயசம் - செய்முறை(1 )

 என்னடா புத்தாண்டு வாழ்த்து மட்டும் சொல்லிட்டு ரெசிபி தராம போய்டாளே-ன்னு பார்தீங்களா. மதுரை சித்திரை திருவிழா-காக புத்தாண்டு அன்று குடும்பத்தோடு கிளம்பி விட்டோம் (என் கணவர் ஊர் மதுரை). மதுரை சித்திரை திருவிழா முதன் முறையா பார்கிறேன், அப்பப்பா கொள்ளை அழகு. திருவிழாவை பற்றி  உங்களோடு பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் புகைப்படத்தோடு சேகரித்து உள்ளேன், விரைவில் அந்த பதிவை எதிர் பாருங்கள்.
திருவிழா முடிந்து அம்மா வீட்டுக்கும் (காரைக்குடி) வந்தாச்சு !! என் குழந்தையை குளிபாட்டுவதில் இருந்து தூங்க வைக்கும் வரை எல்லாத்தையும் அம்மா-விடம் outsource செய்துவிட்டு சந்தோசமாக நாட்களை நகர்த்தி  கொண்டிருகிறேன்.
ஓகே ஓகே சொந்த கதை சோக (சந்தோஷ ryt?? ) கதையை விட்டுட்டு ரெசிபி-க்கு வருவோம்.



அது என்ன செய்முறை(1 )? அப்போ செய்முறை(2 ) வேற இருக்கானு question வந்துருச்சா? வெரி குட். இது சேமியாவில் செய்தது. அரிசியிலும் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

பால் - 4 கப்
சேமியா - 2 கப் (வறுத்தது, வறுக்காதது எதுவானாலும் ஓகே)
சீனி - 1 கப்
ஏலக்காய் போடி - ஒரு சிட்டிகை
ஒரு கரண்டி நெய்யில் வருத்த முந்திரி பருப்பு (10 ) + உலர் திராட்சை (6 )

செய்முறை:

  1. பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் காய்ச்சுங்கள்.
  2. 3 கப் தண்ணீரை காய வைத்து அதில் சேமியாவை சேர்த்து  கொதிக்க விடவும். சேமியா வெந்ததும் தண்ணீரை நன்றாக வடித்து விடவும்.
  3. பால் கொதித்து கொஞ்சம் வற்றியதும் வேக வைத்த சேமியாவை சேருங்கள். சேமியாவை பாலிலும் வேக வைக்கலாம். ஆனால் எதாவது டெக்னிகல் பால்ட் ஆகி பால் திரிஞ்சு போயிடுச்சுனா, அப்புறம் பாலும் கிடையாது! பாயசமும் கிடையாது!
  4. 5 நிமிடம் கழித்து வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏல பொடி, சீனி சேர்த்து நன்றாக கலக்கவும்.  சூடாக / குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.

என் அம்மா மீன் வறுக்கும் வாசனை மூக்கை துளைக்குது. bye bye! 

Thursday, April 14, 2011

தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

உங்கள் வருகைக்கு நன்றி. புத்தாண்டு பலகாரம் எடுத்துகோங்க !

Wednesday, April 13, 2011

பருப்பு உருண்டை குழம்பு


என்னுடைய favorite ரெசிபி. பார்க்கும் போதே சாப்பிடனும்னு தோணுதா......  
 
தேவையான பொருட்கள்:
நலெண்ணெய் - 4  ஸ்பூன்
கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை - கொஞ்சம்
சின்ன வெங்காயம் / பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2 கை
பொடியாக நறுக்கிய தக்காளி - 4
புளி கரைசல் - அரை கப்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மல்லி தூள் , மிளகாய் தூள் - தலா 1  1 /2  ஸ்பூன்
உப்பு
மல்லி தழை - கொஞ்சம்
 
பருப்பு உருண்டை பிடிக்க:
15 நிமிடம் நீரில் ஊற வைத்த கடலை பருப்பு - 3 /4  கப்
பொடியாக அறிந்த வெங்காயம் - 6 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 /2  ஸ்பூன்
உப்பு
 
15 நிமிடம் கழித்து பருப்பு கழுவி நீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும். அரைக்கும் போது தண்ணீர் விட தேவை இல்லை. மற்ற சாமான்களை பருப்புடன் சேர்த்து பிசைந்து உருண்டை பிடித்து வைத்து கொள்ளவும்.
 
செய்முறை:
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்து , வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். வெந்தயம் சேர்பதால் குழம்பு வாசனை வீட்டையே தூக்கும் !!!
  • இப்போ வெங்காயம், தக்காளி சேர்த்து நல்லா வதக்குங்க. அப்புறம் புளி கரைசல், மஞ்சள் தூள், மல்லி + மிளகாய் தூள், உப்பு + 4 கப் தண்ணீர் எல்லாவற்றையும் ஒரே ஷாட்டில் சேர்த்துடுங்க.
  • குழம்பு நல்லா கொதிக்கும் போது உருட்டி வெச்சிருக்கும் பருப்பை ஒன்றன் பின் ஒன்றாக போடுங்க.
  • உருண்டை வெந்ததும் (இதை செக் பண்ண ஒரு உருண்டையை எடுத்து அமுக்கி பாருங்க.அதுக்காக அமுக்கி அமுக்கி எல்லா உருண்டையையும் பிச்சுடாதீங்க!) அடுப்பை அணைத்து விட்டு மல்லி தழை சேர்த்து பரிமாறவும்.
டிப்ஸ் டிப்ஸ்: பருப்பை அரைத்த மிக்சி, உங்கள் கை இரண்டையும் கொஞ்சம் தண்ணீரில் கழுவி அந்த தண்ணீரை குழம்பு கொதிக்கும் போது சேர்த்தால் குழம்பு கெட்டியா, வாசனையா இருக்கும்.


Saturday, April 9, 2011

Egg சப்பாத்தி ரோல்

என்றைக்கெல்லாம் எனக்கு சீக்ரம் தூக்கம் வருதோ அன்றைக்கெல்லாம் இது தான் எங்க வீட்டு டின்னர் (இந்த சப்பாத்தி-ய மட்டும் என்  கணவர்-கிட்ட இருந்து பிரிக்க முடியல. இல்லேன்னா தோசை-ய சுட்டு குடுத்துட்டு சீக்கிரம் kitchen-ஐ மூடிவிடலாம்-ன்னு ரொம்ப பீல் பண்ணுவேன்).
ரொம்ப பெரிய வேலையெல்லாம் இல்லீங்க. முட்டை பொரியல் செய்து கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்டிங்குடன் பரிமாற வேண்டியது தான்.

தேவையான பொருட்கள்
  1. எண்ணெய் - 4  ஸ்பூன்
  2. கடுகு, உளுந்து, கருவேப்பிலை - கொஞ்சம்
  3. பெரிய வெங்காயம் - 2  - பொடியாக அரிந்தது
  4. பச்சை மிளகாய் - 1
  5. முட்டை - 3
  6. மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
  7. உப்பு
  8. மிளகு தூள் - 2  ஸ்பூன்
செய்முறை
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • முட்டை அனைத்தையும் உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முட்டை வேகும் வரை வதக்கவும்.
  • கடைசியாக மிளகுதூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடலாம்.

ம்ம்ம்ம் இப்போ மெயின் மேட்டர்-ருக்கு வருவோம்.

ரோல் செய்ய:
  • சப்பாத்தி
  • லெமன் ஜூஸ்
  • பொடியாக அரிந்த வெங்காயம்
  
ஒவ்வொரு சப்பாத்தி நடுவிலும் முட்டை பொரியலை பரப்பி, கொஞ்சம் வெங்காயம், அரை மூடி லெமன் ஜூஸ் தெளித்து படத்தில் இருப்பது போல் ரோல் செய்து பரிமாறவும்.

Thursday, April 7, 2011

செட்டிநாடு காலிப்ளவர் பருப்பு சூப்


கல்யாணத்துக்கு பின் முதல் தடவையா இந்த சூப் செய்த பொது என் கணவர் என்னை ரொம்ப கிண்டல் பண்ணினார். மஞ்ச கலர்-ல ஒரு தண்ணிய குடுத்து இத சூப்-ன்னு சொல்றியே-மா?-ன்னு கேட்டார். பொதுவா சூப்-னா நிறைய வெஜ்ஜிடபில், கார்ன் போட்டு வடிச்ச கஞ்சி மாதிரி கெட்டியா இருக்கும், அல்லது தக்காளி நிறைய போட்டு ரெட் கலர்-ல இருக்கும்.
ஆனா எங்க ஊரு பருப்பு சூப் துவரம் பருப்பு, நெய் சேர்த்து ஹெல்தி-யா செய்தது. பெரிய ஹோட்டல்-ல சாப்பிடுற வரைக்கும் சூப்-ன்னா எங்க ஊரு துவரம் பருப்பு சூப் மட்டும் தான் எனக்கு தெரியும்.  ஒரு தடவை இத ட்ரை பண்ணுங்க அப்புறம் சோள கஞ்சி சூப்பை நினைத்து கூட பாக்க மாட்டீங்க.
 
தேவையான பொருட்கள்:
 
  1. துவரம் பருப்பு - அரை கப் (சூப் திக்கா இருக்க கூடாது). பருப்பை கழுவி 10 நிமிடம் நீரில் ஊற போடவும்.
  2. காலிப்ளவர் - ஒரு கை அளவு (பொதுவா எந்த காயும் இதிலே சேர்க்க மாட்டாங்க. நான் கொஞ்சம் ஆர்வ கோளாறில் காலிப்ளவர் போட்டுருக்கேன்)
  3. பெரிய வெங்காயம் - 1 நீளமாக நறுக்கியது
  4. தக்காளி - 2 நீளமாக நறுக்கியது
  5. பச்சை மிளகாய் - 3  நீளமாக நறுக்கியது
  6. மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
  7. கொத்தமல்லி - பொடியாக அரிந்தது - ஒரு கை
  8. உப்பு  
தாளிக்க:
நெய் - 3  ஸ்பூன்
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய் - தலா 1
சோம்பு - அரை ஸ்பூன்
கருவேப்பிலை - கொஞ்சம்
 
செய்முறை:
 
  • பிரஷர் குக்கர்-ரில் நெய் + எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்திருக்கும் பொருட்களை போடவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
  • ஊற வைத்த பருப்பில் இருந்து  தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.
  • கழுவிய காலிப்ளவர், மஞ்சள் தூள்,3 கப் தண்ணீர்,  உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை சமைக்கவும்.
  • விசில் அடங்கியதும் குக்கரை திறந்து கொத்தமல்லி இலை, தேவையான அளவு தண்ணீர் (சூப் தண்ணியா இருந்தா தான் டேஸ்ட்-டா இருக்கும்) சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
இது காலிப்ளவர் போடாத சூப்.
 
குறிப்பு: ஈவினிங் டிபன்-னா அப்டியே குடிக்கலாம். இல்லேன்னா சாதத்துல போட்டும் சாப்பிடலாம்.

Friday, April 1, 2011

பிரிஞ்சி சாதம் / Birinji Rice

இந்த போட்டோவோட ஒரு மூலையில் ஒரு பிரிஞ்சி இலை தெரியுதே, அதுனால இதுக்கு பிரிஞ்சி சாதம்-ன்னு பேரு வெச்சிருக்கேன்-ன்னு நினைக்காதீங்க. பொதுவா தேங்காய் பாலில் செய்த வெரைட்டி ரைஸ்-க்கு இந்த பேரு வெக்கிறாங்க, இந்த சாதம் தேங்காய் பாலில் செய்தது. சிலர் இதுல காய்கறி,மிளகாய் தூள் எல்லாம் சேர்த்து பிரியாணி மாதிரி செய்றாங்க. என்னோடது ரொம்ப சிம்பிள் வெர்சன்-ங்க. தேவையான பொருட்கள்:

  1. எண்ணெய் அல்லது நெய் - 4 ஸ்பூன்

  2. பிரிஞ்சி இலை - 2

  3. சோம்பு - ஒரு ஸ்பூன்

  4. ஏலக்காய் - 2

  5. கிராம்பு - 6 (வேற எந்த கார சாமான்களும் சேர்க்க போவது இல்லை. எனவே உங்கள் கார அளவை பொருத்து கிராம்பு கூட்டி/குறைத்து கொள்ளுங்கள்)

  6. பட்டை - 1 பீஸ்

  7. அன்னாசி பூ, ஸ்டார் பிரிஞ்சி போன்றவையும் உங்கள் விருப்பம் போல் சேர்த்து கொள்ளுங்கள்

  8. அரிசி - ஒரு கப் (பாஸ்மதி / நார்மல் சாப்பாடு அரிசி எது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்)

  9. தேங்காய் பால் - 2 1 /2 கப்

  10. 2 ஸ்பூன் பாலில் ஊற வைத்த 3 -4 இதழ் குங்கும பூ (அல்லது) 2 ஸ்பூன் நீரில் கரைத்த கால் ஸ்பூன் கேசரி பவுடர்

  11. நெய்யில் வருத்த முந்திரி பருப்பு & கிஸ்மிஸ் - கொஞ்சம்

  12. உப்பு

செய்முறை:



  • அரிசியை கழுவி 5 நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்கள். குக்கர்-ரில் எண்ணெய்/நெய் விட்டு காய்ந்ததும் எண் 2 -7 -ல் உள்ள அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.

  • ஒரு நிமிடம் கழித்து, தண்ணீரை நன்றாக வடித்து விட்டு அரிசியை சேர்த்து, அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும் வரை வதக்கவும். தேங்காய்பால் உப்பு சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் வைக்கவும். விசில் வராவிட்டாலும் பரவாயில்லை, விசில் வந்தால் ஒரு விசில் போதும்.

  • பிரஷர் அடங்கியதும் குங்கும பூ/கேசரி பவுடர்-ஐ சாதம் நடுவில் மட்டும் ஊற்றவும். வருத்த முந்திரி & கிஸ்மிஸ்-ஐ மேலே கொட்டி மூடி விடவும். முடிந்தால் 1 நிமிடம் மிதமான தீயில் வைக்கலாம்.

  • 5 நிமிடம் கழித்து மூடியை திறந்து சாதத்தை நன்றாக கிளறிவிட்டு சூடாக பரிமாறுங்கள்.

குறிப்பு: தயிர் பச்சடி, சால்னா, காரமான சிக்கன் / காய்கறி கூட்டு இவற்றுடன் சுவையாக இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...